தொடங்கும் முன் ஒரு சின்ன disclaimer. இந்த பதிவு அரசியல் / மருத்துவ / உளவியல் பற்றியதல்ல. வெறும் எண்ணக்குவியல். புரியல? வெறும் புலம்பல் தாங்க. மேல படிங்க.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு என் நண்பன் ராமச்சந்திரனை பார்க்கும் ஒரு வாய்ப்பு. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என எவ்வளவு அலை வந்தால் என்ன? அந்த அலை மேலே மிதக்கும் முழுகாத ஷிப்பே எங்கள் பிரண்ட்ஷிப், என்று நானே சொல்லிக்க வேண்டியது தான்.
தெரியாதனமாக அவன் வீட்டுக்கு சென்ற வாரம் செல்ல வேண்டிய சூழ்நிலை.
வீட்டுக்குள் நுழையும் போதே முதல் அதிர்ச்சி. ஏதோ மாரியம்மன் கோவில் திருவிழா மாதிரி வீடு முழுக்க செட்டப். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் இரண்டு முகக்கவசம் (mask), கையுறை (gloves), சானிடைசர் (sanitizer) கச்சிதமாக இருந்த அவனை பார்த்ததும் அடுத்த அதிர்ச்சி.
இதே நிலைமை போனால் இவனுக்கு அடுத்த குழந்தை பிறக்கும் போது அது, கர்ணன் கவச குண்டங்களோடு பிறந்தால் போல், அனேககமா மாஸ்க் சானிடைசர் சகிதமாக பிறக்க வாய்ப்புண்டு.
வீட்டுக்குள் நான் நுழையும் முன்பே கிட்டத்தட்ட என் தலை முதல் கால் வரை சானிடைசரால் குளிப்பாட்டி, மூச்சு திணற இரண்டு மாஸ்கை மாட்டிவிட்டுத் தான் உள்ளே வர அனுமதித்தான்.
வழக்கமாக அவன் வீட்டுக்கு வந்தால் காஃபியும் கையுமாக அவன் மனைவி ஜானகி வரவேற்ப்பாள். இந்த முறை கபசுர குடிநீர். எங்க ஆபீஸ் காஃபி தொடர்ந்து 2 வருடம் குடித்தால் கொரோனா என்ன பாம்பு கடி கூட ஒன்னும் செய்யாது என்று அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. வீடு முழுக்க மாத்திரை மருந்து - oxygen cylinder மட்டும் தான் பாக்கி.
Fear என்ற நிலையை தாண்டி paranoid என்ற நிலையை எட்டிவிட்டான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவனைச் சொல்லி தப்பில்லை. Twitter, Facebook, தொலைக்காட்சி என எதைத் திறந்தாலும் எதிர்மறைச் செய்திகள்.
"தொடர்ந்து இரண்டு மணி நேரம் செய்திகளை பார்த்தால் இந்த உலகம் இனி எனக்கானதில்லை என எண்ணம் வரத்தான் செய்யும்."
ஒரு ஜோசியர் இந்தியா ஜாதகம்ன்னு வரைந்து குரு பெயரும் போது நிலைமை சரியாகும்ன்னு எழுதியிருக்கிறார். அது கூட பரவாயில்லை சார், அந்த பதிவை 300 பேர் ஷேர் பன்னிருக்காங்க பாருங்க, என்னத்த சொல்ல. கொரோனா பெயர்ச்சி எப்போ வரும்ன்னு நானும் கமெண்ட் போட்டுட்டு வந்துட்டேன்.
சில நேரம் மாஸ்க் நம் மூக்கு மற்றும் வாய்க்கு மட்டும் அல்ல, நம் காதுகளுக்கும் தேவை தான்.
நேர்மாறாக, இது வெறும் சளி காய்ச்சல் மாதிரி தானே சார், எதுக்கு பயப்படனும் என்ற மனநிலை பலரிடம் உண்டு. அதனால் தான் என்னவோ மருத்துவர்களும் அரசாங்கமும் சொல்லும் எந்த வழிமுறைகளும் எனக்கில்லை மற்றவர்களுக்குத்தான் என்ற எண்ணம்.
எவன் நாசமாக போனால் எனக்கென்ன, என் இஷ்டம் போல் என் வாழ்க்கை என நினைக்கும் நபர்களை மட்டுமல்ல அவர்களோடு அண்ணன் தம்பி புழங்கும் பதினெட்டு பட்டி சனங்களையும் கொரோனா விடப்போவதில்லை.
"பயத்தை விட எச்சரிக்கை, விழிப்புணர்வு முக்கியம்."
நம்மைச் சுற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள், நல்ல மனிதர்கள். அதை எந்த தொலைக்காட்சியோ சமூக ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கமின்ஸ் (Pat Cummins) தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், கொரோனாவினால் இந்தியர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து தான் வருந்துவதாகவும் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு 50 ஆயிரம் டாலர் தொகையை பிராணவாயு வாங்க அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
Boss, நீங்க மெய்யாலுமே உயர்ந்த மனிதர் தான். வணங்க வயதில்லை, வாழ்த்துகிறேன்.
என் நண்பன் ராமச்சந்திரனின் லூட்டி தாங்க முடியல. வாஸ்து படி டிவியை சுவர் இருக்கும் பக்கம் திரும்பி வைத்தால் கொரோனா வராதுன்னு சொல்லிவிட்டு வந்தேன்.
நல்லதே நடக்கும். நம்புவோம். இதையும் கடந்து வெல்வோம்.