வியாழன், 9 ஜனவரி, 2020

பஞ்சார விச்சு குஞ்சு நடந்து


இந்த காணொளியை நீங்கள் அனேகமாக பார்த்திருக்கலாம். இல்லையென்றால் தவறாமல் ஒரு முறையேனும் பார்க்கவும்.






சிரித்து சிரித்து வயிறு வலித்தால் சங்கம் பொறுப்பேற்காது. இதை நகைப்புக்குறிய ஒரு விஷயமாக மட்டுமேனோ நினைக்க மனம் வரவில்லை. சற்று உண்ணிப்பாக கவனிக்க முடிந்தால் பல விஷயங்கள் தொன்றும். காணொளியில் அந்த தாயாரோ குழந்தையுடன் மல்லு கட்ட, அந்த குழந்தையோ “உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே” என்ற தோனியில் பதிலளிக்க, கிட்டத்தட்ட ஒரு மினி மூன்றாம் உலகப் போரே நிகழும் அபாயம் தெரிகிறது.



தன் குழந்தை perfect ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லது ஆசை. மற்ற குழந்தைகள் சரியாக பாடத்தையோ பாட்டோ ஏதாகினும் சரியாக பாடம் படிக்கும் போது, நம் குழந்தை தவறாக சொல்லி விட்டால் நம் கெளரவம் என்னாவது என்ற தவிப்பு, இவையனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக தான் அந்த தாயார் தெரிகிறார்.

சிங்கப்பூரில் கியாசு (kiasu) என்ற வட்டாரச்சொல் மிகப்பிரபலம். Fear out of losing  எனப்பொருள் கொள்க. பக்கத்து வீட்டு முழந்தை நன்கு படித்து, தன் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் என்னவது என்ற மனநிலை. அந்த குழந்தை டியூஷன் எடுக்குதா, அதே டியூஷனுக்கு அனுப்பு நம்ம பையனை. அந்த குழந்தை நீலக்கலர் நிக்கர் போட்டிருக்கா, இந்தா எடு அந்த நீலக்கலர் நிக்கர்.

நம் வாழ்க்கையை மற்றவர்களின் செயல்கள் அல்லது சாதனைகள் தீர்மானிக்கின்றனவோ என்ற கேள்வி தான் என் முன்னே.

வேறு கோணத்தில் நோக்க, ஒரு வேளை வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்கின்றோமோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

நண்பர் ஒருவர், நட்பு வட்டாரத்தில் மிகப் பிரபலம். இடியே விழுந்தாலும் கவலையில்லமல் வாங்க சார் டீ சாப்பிடலாம் என்பார். தலை முழுக்க வழுக்கை. கேட்டால், விடுங்க சார், நாமளா போட்டா மொட்டை, சாமியே எடுத்துகிட்டா சொட்டை என்பார்.

தினமும் ரசம் சாதம் தான், என்ன சார் சாம்பார் சாதம் பிடிக்காதா என்று கேட்டதற்கு, “சார், என் மனைவிகிட்ட சாம்பார் சாதம் கேட்கறதும் நடிகர் சிவக்குமார் கிட்ட செல்ஃபி கேட்கறதும் ஒன்னு தான். உசிருக்கு உத்திரவாதம் இல்லை. போற உசிரு ரசம் சாதத்திலேயே போகட்டும்” என்பார்.

மனிதருக்கு பெரிய தொப்பை. “சார், ஒரே வயிரு தானேன்னும் செல்லம் கொடுத்துட்டேன். இப்ப பாருங்க தொப்பையா நிக்குது” என்பார்.

எல்லாவற்றிலும் ஒரு positivity, எவர் கூடவும் போட்டியோ ஒப்பீடோ இல்லை. தன் வாழ்க்கையை தம் கையில், என் போட்டி என்னோடு தான் என்ற ஒரு எண்ணம். இது போன்றோறிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.

எது எப்படியோ, பஞ்சார விட்டு குஞ்சு நடந்தா சரி.